கிரிமினல்களை போற்றுவதுதான் உங்கள் நோக்கமா?
நிச்சயமாக இல்லை. ஆட்டோகிராஃப், ஆட்டோ சங்கரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் தொடர். ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனரை எப்படி இந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மிகப்பெரிய கிரிமினல் ஆக்கினார்கள் என்பதைதான் அந்த தொடர் விரிவாக சொன்னது. இதை பார்க்கிறபோது எச்சரிக்கை உணர்வுதான் வருமே தவிர, யாரும் ஆட்டோ சங்கர் ஆகிவிட வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள். எந்த கிரிமினலும் இந்த மண்ணில் தோன்றிவிடக் கூடாது என்பதால்தான் இதுபோன்ற தொடர்களை எடுக்கிறேன். ஆட்டோ சங்கர் தானே எழுதிய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் அது. நிஜத்தை மட்டுமே பேசிய தொடர்.
சந்தனக்காடும் அப்படித்தான். இந்த தொடருக்காக வீரப்பன் வாழ்ந்த இடங்களையும், அவரோடு பழகிய மனிதர்களையும் நேரில் சென்று பார்த்து, பழகி, பிறகுதான் இந்த தொடரை உருவாக்கினேன். வீரப்பன் யார்? கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் அவரை வெறும் சந்தனக்கடத்தல் மன்னனாக மட்டும் பார்க்க முடியாது. ஒரு தமிழின போராளியாகவும் இருந்திருக்கிறார். தமிழச்சிகள் கர்நாடக எல்லையில் அங்குள்ள போலீஸ் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டபோது, அந்த போலீஸ் ஸ்டேஷனை கைப்பற்றி ஷட்டரை மூடிவிட்டு உள்ளேயே அத்தனை போலீஸ்காரர்களையும் சுட்டுக் கொன்ற போராளிதான் வீரப்பன். இவர் வீட்டு பெண்ணை கற்பழித்தார்கள் என்றா அந்த கொலைகளை செய்தார்? இல்லையே! எல்லா தமிழச்சிகளையும் தன் குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக பார்த்ததன் விளைவுதானே அது? அதன்பின்தான் தமிழச்சிகளிடம் வாலாட்ட தயங்கியது கன்னட போலீஸ். இப்படிப்பட்ட மனிதருடைய கதையை சொல்லாமல் நான் யார் கதையை சொல்வது?
திரைப்பட இயக்குனரான நீங்கள், சந்தனக்காட்டையும் திரைப்படமாக எடுத்திருக்கலாமே?
எடுத்திருக்கலாம்தான். ஆனால், மொத்த கதையையும் 50 சீனில் சொல்லியாக வேண்டும். சீரியல் என்றால் ஒரு சம்பவத்தையும் விட்டு விடாமல் 200 எபிசோடுகளில் சொல்லலாம். அந்த சுதந்திரம் இருக்கிறதல்லவா? அதுமட்டுமல்லாமல் வீரப்பன் மரணத்தை சொல்லும்போது பல உண்மைகளை இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டியிருக்கிறது. சினிமாவை விட சீரியலாக இருந்தால் சென்சார் சிக்கல்கள் இருக்காது. இந்த தொடர் சூடு பிடித்ததும் பாருங்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சகளை எழுப்பும்.
இந்த தொடருக்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தாரே?
சுமார் 120 நாட்கள் காட்டிலேயே தங்கி மிகப்பெரும் இன்னல்களை சந்தித்து இந்த தொடரை எடுத்திருக்கிறோம். ஏராளமானவர்களின் கடுமையான உழைப்பு இருக்கிறது இந்த தொடருக்கு பின்னால். ஆனால், இந்த தொடரை ஒளிபரப்புவதற்கு முன் கோடிக்கணக்கில் பணம் வேண்டும் என்று அவர் கேட்டால் எப்படி? பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் கேட்கவில்லை. யாரோ அவரை தவறாக தூண்டி விட்டிருக்கிறார்கள். கடைசியில் நீதிமன்றமே அனுமதி கொடுத்துவிட்டது. முத்துலட்சுமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய ஐயா ராமதாஸ் எப்போதும் தயாராக இருக்கிறார்.
வீரப்பனுக்கு பல அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததால்தான் காட்டிற்குள் இத்தனை காலம் இருக்க முடிந்ததா?
யாருடைய உதவியோடும் அவர் காட்டுக்குள் இருந்தததில்லை. ஒவ்வொரு நாளும் ஒடிக்கொண்டேதான் இருந்தார். அத்தனை பெரிய காட்டில் அவருக்கு யார் வருகிறார்கள். எங்கே வருகிறார்கள் என்பதெல்லாம் கூட தெரியும். பறவைகள், மிருகங்கள் உதவியுடன்தான் அவர் காட்டிற்குள் இருந்தார் என்பதுதான் உண்மை. இந்த தொடரை பாருங்கள். பல உண்மைகள் உங்களுக்கு ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஊட்டும்!
மறுபடியும் சினிமா பக்கம் செல்வீர்களா?
மகிழ்ச்சி, நலமறிய ஆவல் என்ற இரண்டு படங்களை இயக்க தற்போது சம்மதித்துள்ளேன். இதில் ஒரு கதையில் நானே ஹீரோவாக நடிக்கும் எண்ணமும் இருக்கிறது.
தமிழ் சினிமா.காம்
1 comment:
ஏகப்பட்ட ஆணி போல...நிறைய தமிழ் சினிமா.காம் படிக்கிறீங்க போல :))
Post a Comment