Tuesday, 13 November 2007

அரசியல் நட்சத்திர தீபாவளி

தீபாவளி, பொங்கல் என்று வந்துவிட்டால் எல்லா பத்திரிகைகளும், டி.வி. சேனல்களும் சர்வம் சினிமா மயமாக மாறிவிடுகின்றன. அப்போதுதான் தீபாவளி கொண்டாடிய திருப்தியே ஏற்படுகிறது. நாம் மட்டும் விதிவிலக்காக இருந்து என்ன சுகத்தைக் கண்டோம்? எனவே, சினிமா ரசிகர்களைத் திருப்திபடுத்தும் வகையில், அரசியல் தலைவர்களை சினிமா நட்சத்திரங்களாக மாற்றிவிட்டோம்.

நட்சத்திர சந்திப்பு

(வாசகர்களே, புரட்சி ஸ்டார் ஜெயலலிதாவும், வட இந்திய சீனியர் ஸ்டார் வாஜ்பாயும் உங்களுக்காக சந்தித்துப் பேசுகிறார்கள்.)

ஜெயலலிதா : வணக்கம். நாம முதல் முதல்லே எந்த படத்திலே சேர்ந்து நடிச்சோம்னு ஞாபகமிருக்கா?

வாஜ்பாய் : "டெல்லி கோட்டை' படத்தைத்தானே சொல்றீங்க? அதெல்லாம் மறக்கக்கூடிய விஷயமா? அந்தப் படத்திலே ஏற்பட்ட அனுபவங்களை நினைச்சா இப்ப கூட உடம்பெல்லாம் நடுங்குது. ஒரு மாதிரி ஆன்ட்டி ஹீரோயினா நீங்க அதுலே நடிச்சிருந்தீங்க இல்லே?

ஜெயலலிதா : ஆமா! என்னை நம்ப வெச்சு, ஏமாத்தற கூட்டத்துக்கு தலைவரா நீங்க நடிச்சிருந்தீங்க. உங்களை நான் எப்படி பழிவாங்கறேன்றதுதான் கதை. படம் நல்லபடியா ரிலீஸ் ஆனாத்தான் எனக்கு எதிர்காலமேன்ற மாதிரி, அப்போ நிலைமை இருந்தது.

வாஜ்பாய் : படம் முழுக்க உங்களை சமாதானப்படுத்தற ரோல்தான் எனக்கு கிடைச்சது. எவ்வளவு பயங்கரமா வசனம் பேசியிருந்தீங்க அதுலே. என் லைஃப்லே அந்த மாதிரி திகில் வசனங்களை நான் கேட்டதேயில்லை.

ஜெயலலிதா : அது மட்டுமா? "ஏமாத்திப் போட்டீங்களே, ஐயா. வாஜ்பாய் ஐயா'ன்னு நான் சொந்தக் குரல்லே பாடின பாட்டு, பெரிய ஹிட் ஆச்சே.

வாஜ்பாய் : அந்த க்ளைமாக்ஸ் டீ பார்ட்டி ஸீன் மாதிரி, எந்தப் படத்திலேயும் வந்ததில்லை.

ஜெயலலிதா : அதை ஏன் ஞாபகப்படுத்தறீங்க? செலவு பண்ணதுதான் மிச்சம். ஒரு பிரயோஜனமும் இல்லை.

வாஜ்பாய் : போகட்டும் விடுங்க. விதியை யாராலே மாத்த முடியும்? நாம மறுபடியும் இணைஞ்சு நடிக்கணும்னு நம்ம ரசிகர்கள் ஆசைப்படறாங்கன்னு கேள்விப்பட்டேன்.

ஜெயலலிதா : அதைப் பத்தித்தான் நானும் யோசிச்சுக்கிட்டிருந்தேன். மூன்றாவது அணி கம்பைன்ஸ்லேர்ந்து பேச வந்தாலும் வரலாம். யாரை திருப்பி அனுப்பறதுன்னு இனிமேதான் முடிவு பண்ணனும்.


""மறக்க முடியாத காட்சிகள்''– வளரும் நடிகர் ராமதாஸ்

நான் நடிச்ச பல காட்சிகளை என்னாலே மறக்க முடியாது. குறிப்பா, "நான் சொன்னா கேட்டுக்கணும்' படத்திலே எங்க ஆளுங்களோட, டாஸ்மாக் கடைகளுக்குப் போய், "தயவு செஞ்சு மூடுங்க'ன்னு கெஞ்சுவேன். மூடமாட்டாங்க. மரியாதையா கடையை மூடுங்க'ன்னு எச்சரிப்பேன். அப்பவும் மூடமாட்டாங்க. கோபம் வந்து நானே கடைக்கு பூட்டுபோட்டு, மறுநாள் திறந்து விட்டுட்டு மறுபடியும் கெஞ்சுவேன். அப்படியும் வியாபாரம் நிக்காது. அதுக்காக லட்சியத்தை விட்டுட முடியுமா? கடையை அடிச்சு நொறுக்கிட்டு, அதுக்கப்புறம் கால்லே விழுந்து "வேண்டாம்.... என் பேச்சைக் கேளுங்க'ன்னு கேட்டுக்குவேன். அப்பவும் மூடமாட்டாங்க. கலெக்டரை மூடச் சொல்வேன். பெண்களை மூடச் சொல்வேன். "யாராவது மூடுங்களேன்'னு கத்துவேன். யாரும் மூடமாட்டாங்க. சரி, பத்து மணியிலேர்ந்து ஆறு மணி வரைக்கும் மட்டும் வியாபாரம் நடத்தித் தொலைங்க'ன்னு சொல்லிட்டு வேடிக்கை பார்ப்பேன். அந்தக் காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்புத் தட்டாது.

"மகனே உன் சமர்த்து'ன்னு ஒரு படம். ஹீரோ அன்புமணிக்கும் ஒரு பெரிய வில்லனுக்கும் சண்டை வருது. யாரும் அன்புமணிக்கு ஆதரவா வரமாட்டாங்க. எல்லார் கிட்டேயும் நான் தனி ஆளாவாதாடுவேன். ஆனா யாரும் பதில் சொல்லாம நக்கலா சிரிப்பாங்க. என் உருக்கமான நடிப்பைப் பார்த்து எனக்கே அழுகை வந்தது. அன்புமணிக்கு நிச்சயமா ஆஸ்கார் விருது கிடைக்கத்தான் போகுது. கிடைக்கலைன்னா விடமாட்டேன்.

இப்ப நான் ஒரு முடிவெடுத்துட்டேன். ஒப்பந்தப்படி கலைஞரோட படங்களிலே நடிச்சுக் கொடுத்த பிறகு, 2011லேர்ந்து நானே சொந்தமா படமெடுத்து ஹீரோவா நடிக்கப் போறேன். அப்புறம் பாருங்க என் நடிப்பை.

கழக ஸ்டார் கலைஞர் பதிலளிக்கிறார்

கேள்வி : கழக ஸ்டார் கலைஞர் அவர்களே! குடும்பப் படங்களிலே மட்டும் நீங்க அதிகமா சோபிக்கிறீங்களே. அது ஏன்?

கலைஞர் : விஷமத்தனமா கேக்கறீங்க! "சென்னை கார்ப்பரேஷன்' படத்திலே அமைதியான வில்லனா நான் எவ்வளவு அட்டகாசமா பண்ணியிருந்தேன்னு ராமதாஸ், வரதராஜன், தா.பாண்டியனைக் கேட்டுப் பாருங்க. நினைச்சா அதிருதுல்ல? அவ்வளவு ஏன்? "பந்த் அல்ல உண்ணாவிரதம்' முழு நீள காமெடி படத்திலே, என் நடிப்பைப் பார்த்து நாடே சிரித்து மகிழ்ந்ததே. அதையெல்லாம் மறந்துட்டு குடும்பப் படத்துக்குத்தான் நான் லாயக்குன்னு முத்திரை குத்தறது என்ன நியாயம்?

கேள்வி : என் மனம் கவர்ந்த டாப் ஸ்டார் அவர்களே! நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்தது எது?

கலைஞர் : நான் குழந்தை நட்சத்திரமா சற்றொப்ப 14 வயதிலிருந்தே நடித்து வருகிறேன். இருந்தாலும், இலங்கைப் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "தமிழனாகிய நான்' படத்தில் தமிழ் வீரனாகவும், அமைதியே வடிவான அப்பாவியாகவும் இரட்டை வேடத்தில் தோன்றி, என்னுடைய முத்திரையைப் பதித்திருப்பேன். லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு உருவாக்கித் தந்த படம் அது.

கேள்வி : புகழின் உச்சியில் இருக்கும் கழக ஸ்டாரே! உங்களுக்கு புகழ் தந்த படம் எது?

கலைஞர் : நானே திரைக்கதை எழுதி இயக்கித் தயாரித்த "சட்டமன்றப் பொன்விழா' படம்தான். ஒரு பெரும் தலைவரை நாடு எப்படியெல்லாம் பாராட்டுகிறது என்பதுதான் கதை. அப்படம் வெளிவர விடாமல் செய்யப்பட்ட சதிகளை முறியடித்து ரிலீஸ் ஆனபோது பலர் வயிறு எரிந்தார்கள். அதுதான் அப்படத்தின் வெற்றி.

கேள்வி : கழக ஸ்டார் அவர்களே! கதாசிரியர் என்ற முறையில் நீங்கள் மிகவும் ரசித்து எழுதிய வசனம் எது?

கலைஞர் : "சத்தம் போடாதே' படத்திலே கௌரவ நடிகர் வெற்றிகொண்டான் ஒரு காட்சியில் ராமதாஸைத் தாக்கி, நாக்கைப் பிடுங்கிக்கொள்கிற மாதிரி, வசனம் எழுதியிருந்தேன். ரசிகர்களுக்குத் தெரியாமல் மாறுவேடத்தில் தியேட்டருக்குப் போய், அந்தக் காட்சியில் மக்கள் எப்படி கை தட்டுகிறார்கள் என்று பார்த்து ரசித்தேன். மறுபடியும் அப்படி வசனம் எழுதுகிற வாய்ப்பு கிட்டாமலா போய்விடும்?

"என்னை உருவாக்கிய டைரக்டர்' – குணச்சித்திர நடிகர் மன்மோகன் சிங்

ஆரம்ப காலத்திலே எனக்கு நடிப்பெல்லாம் அவ்வளவா வராது. இருந்தாலும் டைரக்டர் சோனியாதான், "உங்க மேலே எனக்கு நம்பிக்கை இருக்குது. நான் சொல்றபடி செய்யுங்க. அது போதும்'னு ஊக்கம் கொடுத்து ஹீரோவா அறிமுகப்படுத்தினாங்க. ஆனா, சில சமயங்களிலே ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு லாலு பிரசாத் யாதவ், பரதன், கராத், ராகுல் காந்தி, டி.ஆர். பாலுன்னு ஆள் ஆளுக்கு வந்து டைரக்ட் பண்ணும்போது, கொஞ்சம் வருத்தமா இருக்கும். ஆனா, வருத்தத்தைக் காட்டிக்க மாட்டேன். காட்டி என்ன பிரயோஜனம்? சொல்றதைச் செய்யறதுதானே நம்ம வேலை?

அன்னையின் ஆணை' படத்திலே, வில்லன் க்வாட்ரோச்சி என் எதிர்லேயே ஜெயில்லேர்ந்து தப்பி ஓடுவாரு. நான்தான் இன்ஸ்பெக்டர். "பார்த்து மெதுவா போங்க ஸார்'னு நான் அவருக்கு விஷ் பண்ணி அனுப்பணுமே தவிர, பிடிக்க முயற்சிக்கக் கூடாது. கதை அப்படித்தான் போகணும்னு டைரக்டர் சொல்லிட்ட பிறகு நான் என்ன பண்ண முடியும்? என் ஹீரோ இமேஜ் பாதிக்கப்பட்டாலும், படம் எதிர்பார்த்தபடி வந்ததேன்னு டைரக்டருக்கு திருப்தி. அவங்க திருப்திதானே என் திருப்தி!

"அணுவும் அமெரிக்காவும்'னு ஒரு படத்திலே எனக்கு மெயின் ரோல் கொடுத்திருக்காங்க. ரொம்ப வித்தியாசமான முறையிலே சில இடங்களிலே வீரமா வசனம் பேசியிருக்கேன். ஆனா ஃபைட்டிங் கிடையாது. வாய் வீரம் மட்டும்தான். படம் ரிலீஸாகும்போதுதான் என் சம்பந்தப்பட்ட ஸீன் எல்லாம் படத்திலே இருக்குமா, டைரக்டர் கட்பண்ணிட்டாரான்னு தெரியும். சோனியா எனக்கு தொடர்ந்து ஹீரோ சான்ஸ் கொடுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்குது. எங்க டைரக்டர் சோனியா இல்லைன்னா நான் இல்லை.

துக்ளக் - சத்யா

3 comments:

ஜயராமன் said...

நன்றான நகைச்சுவை. சத்யாவின் அக்மார்க் நக்கல். நிதர்சனமான உண்மைகளை அசால்டாக சொல்லுவதில் வல்லவர். வழங்கிய உங்களுக்கு நன்றி.


ஜயராமன்

Anonymous said...

/// Nikkaringaney mudhal padhivula.
Appala indha word verification ellam koncham extra vellaiya teriyudhu comment podumbodhu, mudinja eduthudunga///
மன்னிக்கனும் .நான் ப்ளாக் எழதுறதுக்கு புதுசு.கொஞ்சம் வெவரமா சொன்னா தேவல.

Aani Pidunganum said...

Hello Chaplin,

Unga blog settings->Comments ponningana, adhula oru Show word verification for comments? option irukum, adhu probably Yes select pannirupinga, No select pannina indha Word verification ketkadhu. Naamalum nimmadhiya vandhu comment poda vasadhiya irukum.