ஆணவமே, உன் பெயர்தான் கலைஞரோ !
தமிழக முதல்வர், ஹிந்துமத நம்பிக்கை கொண்டவர்கள் மனம் புண்படும்படி பேசுவது புதிய விஷயமல்ல. ஆனால், ஈரோட்டில் நடந்த தி.மு.க.வின் முப்பெரும் விழாவில் அவர் பேசியுள்ளது, அவர் காட்டி வருகிற ஹிந்துமத துவேஷத்தில், ஒரு புதிய அத்தியாயம்.
ராமர் பாலத்தை இடிக்காமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற மாற்று வழிகளை ஆராய்கிறோம் – என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது, தமிழக முதல்வருக்கு பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டம் வருவதை விட, ராமர் பாலம் இடிக்கப்படுவதைத்தான் அவர் பெரிதும் விரும்புகிறார்; அதனால்தான் மாற்று வழியை ஆராய்வதில் அவருக்கு இவ்வளவு கோபம் வருகிறது. ஆனால் கோபம் வந்து என்ன பயன்?
மத்தியில், காங்கிரஸிற்கு ஓட்டு பயம் வந்து விட்டதால், அதற்கு முன் தி.மு.க. காட்டக்கூடிய "ஆதரவு வாபஸ்' பூச்சாண்டி பயம் எடுபடாது என்கிற நிலை; அதனால் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில், ராமர் மீது இருக்கிற மரியாதையை பிரகடனம் செய்ததோடு மட்டுமல்லாமல், புதிய வழியை ஆராய மூன்று மாத தவணை வாங்கியிருக்கிறது. முதல்வர் முப்பெரும் விழாவில், "...மூட, மௌடீக, மடத்தனமான மதவாதங்களை இன்றைக்கும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் காரணமாக, ராமன் பெயரை இழுத்து அவர்கள் இன்றைக்கு நம்மோடு விளையாடுகிறார்கள்... இன்றைக்கு நமக்கு ஏற்பட்டிருக்கிற, எதிர்காலத்தில் இருள் மயமாக ஆக்குகிற ஒரு பயங்கரமான சதித் திட்டத்தை முறியடிப்பதற்கு, ஒரு தீர்மானத்தை உங்கள் முன் வைக்கிறேன்' என்று கூறிவிட்டு – அந்த தீர்மானத்தில் "மதவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு அஞ்சி... சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்கிற முயற்சிக்கு இடம்கொடுத்து விடக்கூடாது என்று குரல் கொடுக்கிறோம்' – என்று கூறியிருக்கிறார்.
இப்படி குரல் கொடுத்தால் போதுமா? "மூட, மௌடீக, மடத்தனமான' மதவாதத்தை காங்கிரஸும், மத்திய அரசும் பேசத் தொடங்கி விட்டனவே? மத்திய சட்ட அமைச்சர், "இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக ராமர் விளங்குகிறார். விவாதத்திற்கு இடமளிக்கிற விஷயமல்ல இது. ராமர் இருந்தார் என்பதை சந்தேகிக்கவே முடியாது. இமயமலை, இமயமலையே; கங்கை, கங்கையே. அதுபோல ராமர், ராமரே! இதை நிரூபிக்கத் தேவையே இல்லை' என்று கூறிவிட்டார்.
மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து "ராமாயணம் புனிதமானது; மத்திய அரசு மதங்களை – அதுவும் இந்த வழக்கு தொடர்பாக குறிப்பாக ஹிந்து மதத்தை – முழுமையாக மதிக்கிறது' என்று கூறிவிட்டது.
அதாவது, முதல்வர் கூறுகிற "சதித் திட்டம்' மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பெற்றுவிட்டது. "எதிர்காலத்தை இருள் மயமாக்க' மத்திய அரசு முன்வந்து விட்டது. அப்படியிருந்தும் முதல்வர் மத்திய அரசுக்கு எப்படி ஆதரவு தரலாம்? எதிர்காலத்தை இருள் மயமாக்குகிற சதித் திட்டத்தை ஏற்கிற அரசில் தி.மு.க. எப்படி பதவிகள் வகிக்கலாம்? சதிகாரர்களுக்கு உடந்தையான கட்சியாகிவிட்ட காங்கிரஸின் ஆதரவைப் பெற்று, தமிழகத்தில் எப்படி அரசு நடத்தலாம்? இதெல்லாம் பெரியாருக்கு தி.மு.க. இழைக்கிற துரோகமல்லவா?
மத்திய அரசிலிருந்து விலகி, மத்திய அரசுக்குத் தருகிற ஆதரவை வாபஸ் பெற்று, தமிழக அரசுக்கு காங்கிரஸ் தருகிற ஆதரவையும் வேண்டாம் என்று உதறிச் செயல்பட்டால்தானே, சதித் திட்டத்தை முறியடிக்க முடியும்? அதற்கு முதல்வர் துணியாதது ஏன்? பதவி ஆசையைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம்?
"குடிலர்கள், குள்ள நரிகள்' என்று முதல்வர் வர்ணித்துள்ளவர்களின் பட்டியலில் இடம்பெற முன்வந்து விட்ட மத்திய அரசினரை எதிர்க்காத முதல்வர், குடிலர் ஆதரவாளரா? குள்ளநரி போஷகரா? தன்னுடைய பதவி, தன் குடும்பத்தினரின் பதவிகள் என்றால், பெரியார் கொள்கைகளை பலி கொடுக்கத் தயங்காதவர், வெறும் சவடால் பேச்சினால், வீரத்தைக் காட்டுகிறார்! வாய்ச்சொல் வீரம் என்பது இதுதான்.
இப்படி மத்திய அரசைக் கோபிக்க முடியாமல், அவரும் அவர் குடும்பத்தினரும் வகிக்கிற பதவிகள், முதல்வரைத் தடுக்கின்றன.
சரி; முதல்வர் தன்னுடைய கோபத்தை யார் மீது காட்டுவது? இருக்கவே இருக்கிறது ஹிந்து மத நம்பிக்கைகள்.
கோபத்தில், துவேஷத்தைக் கொட்டி முதல்வர் இப்படிப் பேசியிருக்கிறார்: "யார் ராமன்? எந்தப் பொறியியல் கல்லூரியிலே படித்து பொறியாளராக ஆனவன்? எப்போது அந்தப் பாலத்தைக் கட்டினான்? ஆதாரம் உண்டா?' என்றெல்லாம் கேட்டிருக்கிறார் முதல்வர்.
துவேஷம் தலைக்கேறியதால், ரொம்ப புத்திசாலித்தனமாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, அவர் பிதற்றியிருக்கிறார்.
பாலத்தைக் கட்டியது ராமர் என்றால், அவரேதான் கற்களை எடுத்து அடுக்கி, அவற்றை ஒன்றிணைத்து, பாலத்தை தன் கையாலேயே கட்டினார் என்று அர்த்தமல்ல. ஒரு மன்னன் கோவில் கட்டினான்; சிற்பங்கள் வைத்தான் – என்றால் அவை, அவனே உளியைக் கையில் எடுத்து, செதுக்கியவை அல்ல. அவன் ஆணையின் மீது, அவன் விருப்பத்திற்கிணங்க, சிற்பக் கலை வல்லுனர்கள் செய்துள்ள பணிகள் அவை. ஆனால் அவை அந்த சிற்பிகளின் பெயரில் வழங்கப்படுவதில்லை; சம்பந்தப்பட்ட மன்னன் வைத்த சிற்பங்களாகவே அவை புகழ் பெறுகின்றன.
அதே போலத்தான் ராமர் கட்டிய பாலமும். முதல்வருக்கு ராமாயணத்தைப் பற்றி இழிவாகப் பேசத்தான் தெரியுமே தவிர, அதிலிருந்து மேற்கோள் காட்டுகிற போதெல்லாம் எதையாவது தப்பும் தவறுமாகப் பேச அவர் தவறுவதில்லை. (இதற்கு முன்பும் நாம் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.)
அந்த பாலம் கட்ட, ராமருக்கு சமுத்திரராஜன் வழி கூறினான். அவனே, அதற்கு நளன் என்ற நிபுணனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் யோசனை கூறினான்.
"....நளன், தேவதச்சனாகிய விச்வகர்மாவின் மகன்; தந்தையிடமிருந்து வரமும் பெற்று, தொழிலும் கற்றவன்; நிபுணன். அவன் பாலத்தைக் கட்ட முன்வந்து, சுக்ரீவனைப் பார்த்து, "வானரர்களில் சிறந்தவரே! பாலம் கட்டுவதற்கான எல்லாப் பொருட்களும் உடனே சேகரிக்கப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொண்டான்.
நளன் கேட்ட பொருட்களை சேகரிக்க வானரர்கள் புறப்பட்டனர். (வானரர்கள் என்றால் ஆங்கிலத்தில் சொல்கிற "மங்கி' அல்ல; அவர்கள் குரங்குகள் அல்ல; பெரும் வீரர்கள்; கற்றவர்கள்; நகரத்தில் அரண்மனைகளைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தவர்கள்.... என்கிற விவரங்கள் வால்மீகி ராமாயணத்தில் இருக்கின்றன).
"வானரர்களின் உதவியுடன், பாறைகள் தகர்க்கப்பட்டன; மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு, கொண்டுவரப்பட்டன. இம்மாதிரி பாறைகளும், மரங்களும், மற்ற பொருட்களும் கடற்கரையில் கொண்டு வந்து சேர்ப்பிக்கப்பட்டன. பாலம் கட்டப்படுகையில், பாறைகளை நேர்க்கோட்டில் நிறுத்தி வைக்க, பலமான கயிறுகள் பயன்படுத்தப்பட்டன. நளன் உத்திரவிட்டவாறு, பாறைகளை சமுத்திரத்தில் தள்ளிக் கொண்டும், மரங்களை பாறைகள் மீது நிறுத்தியும், பல வேலைகளைச் செய்தும், வானரர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர். கட்டி முடிக்கப்பட்ட பாலம், வான வீதியில் தெரிகிற நக்ஷத்திர மண்டலம் போல காட்சி அளித்தது. மேல் வானத்திலிருந்து பார்ப்பதற்கு, ஒரு பெண்ணின் கூந்தலை, இருபுறம் விலக்கி எடுக்கப்பட்ட வகிடு போல தோற்றமளித்த அந்த பாலத்தின் மீதேறி, வானரர்களும், மற்றவர்களும் கடலைக் கடந்து சென்றனர்...'
இவையெல்லாம் வால்மீகி ராமாயணத்தில், கூறப்பட்டுள்ள விவரங்கள். ஆகையால் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக்கொண்டு, பிதற்றியுள்ள முதல்வர், "நளன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார்?' என்றாவது கேட்டிருக்கலாம். அப்படிக் கேட்டிருந்தால், அதற்கு நம்முடைய பதில் : நளன் தனது தந்தையிடம் தொழில் கற்றவன். நிபுணன் என்று பெயர் பெற்றவன்.
அது இருக்கட்டும். "ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பாலம் கட்டினா(ன்)ர்?' என்று கேட்கிற முதல்வர், இதேபோல வேறு சில விஷயங்களைப் பற்றியும் கேள்வி கேட்பாரா?
"கண்ணகி தன்னுடைய மார்பகத்தைக் கிள்ளி எறிந்து, மதுரையை எரித்ததாகச் சொல்கிறார்களே – அந்த டெக்னிக்கை, அவள் எந்தக் கல்லூரியில் படித்தாள்? அது என்ன பயாலஜியா? அல்லது வெடிகுண்டு தயாரிக்கிற கலையா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில் கண்ணகி காட்டியது, கற்பின் சக்தி என்பதை ஏற்பவர்கள் நாம்.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய முதல்வர், "தொல்காப்பியர் எந்தக் கல்லூரியில் இலக்கணம் படித்தார்? தமிழ் இலக்கணத்தையே வகுத்ததாகச் சொல்லப்படுபவருக்கு இலக்கணம் கற்பித்தது யார்?' என்று கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனெனில், நமது சிற்றறிவுக்கு எட்டாத, பெரும் புலமையும், வல்லமையும் படைத்தவர்கள் முன் காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் நாம்.
"திருவள்ளுவர், திருக்குறள் எழுதியதாகச் சொல்கிறார்களே – அவர் எங்கு செய்யுள் இலக்கணம் படித்தார்? எங்கு தமிழ் கற்றார்? எங்கு ஃபிலாஸபி என்கிற தத்துவ விசாரணையை கற்றார்?' என்றெல்லாம் கேட்பாரா முதல்வர்? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால், திருவள்ளுவர் இறையருள் பெற்ற மகான் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.
சரி, இதெல்லாம் போகட்டும். ராமர் இருந்தாரா என்று கேட்கிற முதல்வர், இதுவரை தப்பித் தவறியாவது மற்ற மத நம்பிக்கைகள் பற்றி ஒரு சிறு விமர்சனமாவது செய்தது உண்டா? காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பால் மசூதியில் (புனித ஸ்தலத்தில்) நபிகள் நாயகத்தின் தலை முடி ஒன்று இருப்பதாகக் கூறப்பட்டு, அது பெரிதும் மரியாதைக்குரியதாகக் கருதப்படுகிறதே – அது பற்றி முதல்வர் பேசியதுண்டா?
"அந்த முடி, நபிகள் முடிதான் என்று எப்படித் தெரியும்? என்ன ஆதாரம்?' என்று அவர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம்; ஏனென்றால் மற்ற மத நம்பிக்கைகளை மதிக்கக் கற்றவர்கள் நாம்; மற்ற மதத்தவர்கள் போற்றி வணங்குகிற மகான்கள் பற்றி அவமரியாதையாகப் பேசுவது, அற்பத்தனம் என்று நம்புகிறவர்கள் நாம்.
"ஏசு கிறிஸ்து சிலுவையில் மாண்டு, பின்னர் உயிர்ப்பித்து வந்ததாகச் சொல்கிறார்களே? அவர் அந்தக் கலையை எந்த ஆராய்ச்சிக் கூடத்தில் பயின்றார்? அல்லது அவரை உயிர்ப்பித்தவர் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலம் இந்த சிகிச்சையைக் கற்றார்? ஆதாரம் உண்டா?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். மற்ற மத நம்பிக்கையையும், மற்ற மதத்தவர்கள் போற்றுகிற இறைத் தூதர்களையும் மட்டமாகப் பேசுவது, காட்டுமிராண்டித்தனமான செயல் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.
இவ்வளவு போவானேன்? "புத்தர் அணிந்த ஆடை – மஞ்சள் நிறமுடையது என்பதால், நானும் மஞ்சள் துண்டு போடுகிறேன்' என்பது முதல்வர், தன்னுடைய மஞ்சள் மகிமை பற்றி அருளிய பற்பல காரணங்களில் ஒன்று. "புத்தர் மஞ்சள் ஆடை அணிந்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அவர் எங்கே அந்த ஆடைக்கு சாயம் ஏற்றினார்?' என்று முதல்வர் கேட்பாரா? நாம் கேட்க மாட்டோம். ஏனென்றால், அவதார புருஷர்கள் போல தோன்றிய பெரியவர்கள் பற்றி, மடத்தனமான விமர்சனங்கள் செய்வது, சுத்த முட்டாள்தனம் என்பதை உணர்ந்தவர்கள் நாம்.
இராமாயணம் வெறும் கதை என்று நேரு கூறியிருக்கிறார் – என்பது முதல்வர் காட்டுகிற பெரிய ஆதாரம்! நேரு உட்பட – எந்த நாஸ்திகரும், ராமாயணம் பற்றியோ, ஹிந்துக்கள் நம்பிக்கைகள் பற்றியோ, கூறுகிற கருத்துக்கள், அவை பற்றிய தீர்ப்பாகிவிடாது.
சரி, நேரு சொன்னதை இப்படி வேத வாக்காக – மன்னிக்கவும், பெரியார் வாக்காக – எடுத்துக்கொள்கிற முதல்வர், நேரு சொன்ன மற்றொரு கருத்து பற்றி என்ன சொல்லப்போகிறார்? "நான்சென்ஸ்' என்று தி.மு.க.வினரை நேரு வர்ணித்ததற்காக, இவர்கள் ஏன் போராட்டம் நடத்தினார்கள்? நேருவே சொல்லிவிட்டாரே? அப்புறம் ஏது அப்பீல்? "நான்சென்ஸ்' என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே!
முதல்வர் வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார் – அதுவும் ஹிந்து மத நம்பிக்கைகளை பற்றி மட்டும்தான். ஏனென்றால் ஹிந்துக்கள் இளிச்சவாயர்கள் என்பது அவருடைய தீர்மானமான அபிப்ராயம். இல்லாவிட்டால், கோடானுகோடி மக்கள் வணங்குகிற புருஷோத்தமனை, இப்படி தாறுமாறாகப் பேசுவாரா அவர்?
பணம் தருகிற கர்வம், பதவி தருகிற பித்து, அரசியல் புகழ் தருகிற ஆணவம் போன்றவை ஒன்று கூடி ஒருவரிடம் இருக்கும்போது, அவர் வாய் இப்படித்தான் பேசும். ராமரின் பொறியியல் தகுதி பற்றி பேசுகிறவர், எந்தத் தகுதி கொண்டு முதல்வர் பதவி வகிக்கிறார்? மக்கள் தருகிற ஓட்டு; அதே மக்களில் முக்காலே மூணு வீசம் பேர் ராமரை தெய்வமாக வணங்குகிறவர்கள்.
"அந்த ஓட்டு வேண்டாம்; ராமனை தெய்வமாக நினைக்கிற மூடர்களின் ஓட்டு வேண்டவே வேண்டாம்!' என்று சொல்வாரா முதல்வர்? அவர் சொல்லாவிட்டால் என்ன? நாம் சொல்வோம். ராமரையும், மற்ற தெய்வங்களையும் வணங்குகிற ஹிந்துக்கள், இந்த முதல்வருக்கும், அவர் சார்ந்துள்ள கட்சிக்கும், இனியும் வாக்களிப்பது, வெட்கக்கேடான செயலாகத்தான் இருக்கும்.
சுட்டது from துக்ளக் (திரு.சோ)