Monday, 24 December 2007

கொஞ்சம் தெரிந்துகொள்வோம்

ஷண்முகசுப்பையாவின் கவிதை ஒன்று.

அணைக்க ஒரு
அன்பில்லா மனைவி
வளர்க்க இரு நோயுற்ற சேய்கள்
வசிக்கச் சற்றும்
வசதியில்லா வீடு
உண்ண என்றும்
உருசியில்லா உணவு
பிழைக்க ஒரு
பிடிப்பில்லாத் தொழில்
எல்லாமாகியும்
ஏனோ உலகம் கசக்கவில்லை

துவர்க்கும் நெல்லிக்காயின் அடிவாரத்தில் சுவைக்கப்படும் .00001 மில்லிகிராம் இனிப்புதான் வாழ்க்கை.


லிப்சன் கெய்சர் என்பவர் ஒரு மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர். உலகெங்கும் சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதையே தொழிலாகக் கொண்டவர்.

ஒருமுறை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இவர் பயிற்சி வகுப்பு நடத்தியபோது, ஐநூறு வெள்ளி கட்டிவிட்டுப் பயிற்சி வகுப்பு மேற்கொண்டவர்களை நோக்கி அதிர்ச்சி தரும்படி பேசினார்.
கெய்சர் இப்படி ஆரம்பித்தார்.

நீங்கள் இறந்து விடுகிறீர்கள். உங்களைச் சவப்பெட்டியில் கிடத்தி இருக்கிறார்கள். மேல் பலகை மீது இன்னும் ஆணிகள் அறையப்படவில்லை. உங்களைச் சுற்றிப் பலரும் சூழ்ந்து நிற்கிறார்கள். சிலர் வாய்பொத்தி அழுகிறார்கள். சிலரோ கதறுகிறார்கள். வேறு சிலர் உங்கள் கால்கள் அருகே மண்டியிடுகிறார்கள். பலர் மலர்வளையம் வைக்கிறார்கள் என்றார்.
நான் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள நேர்ந்திருந்தால், அடப்பாவி மனுஷா! நாலு நல்ல விஷயம் சொல்வாய் என்று பார்த்தால், சாகவே அடித்துவிட்டாயா? என்று எண்ணியிருப்பேன். ஆனால் இதில் கலந்துகொண்டவர்களோ, எங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிட்ட பயிற்சி வகுப்பு இது என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
கெய்சர் தொடர்கிறார். இப்போது எவரோ ஒருவர் உங்களை விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறார்.

நல்ல மனுஷன்! பாவம்! அல்ப ஆயுசுல போய்ச் சேர்ந்துட்டாரு.
இதைக் கேட்டதும், உங்கள் காதுகள் உயிர்ப்பெறுகின்றன. ஒலியை மட்டும் வாங்கிக்கொள்ளும் மூளையின் பகுதி வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. ஆகையால் காதுகளைத் தீட்டிக்கொண்டு உங்களைப் பற்றிய விமர்சனங்களை நீங்கள் கூர்ந்து கவனியுங்கள்.

இப்போது பேசுகிறார்களே, இவைதான் உங்களைப் பற்றிய கலப்படமற்ற உண்மையான விமர்சனங்கள்.

ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சரி, அவனுக்கான அஞ்சலி கூட ஒரே நிமிடம்தான். இந்த நேரத்திற்குள் அவன் நினைக்கப்பட்டு இருந்தாலும் மறுநிமிடமே மறக்கப்பட்டுவிடுகிறான்.

இந்த ஒரு நிமிட விமர்சனம் அல்லது ஒரு நிமிடச் சிந்தனை எப்படிப்பட்டவராக இருக்கவேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்யக்கூடாது. இதை நாம்தான் தீர்மானிக்கவேண்டும்.

இந்த விமர்சனம்தான் இனி மேற்கொள்ள இருக்கும் வாழ்க்கைப் பாதையை நிர்ணயிக்கப்போகிறது.

நல்ல மனுஷன்தான். ஆனா புள்ளைகளுக்கு ஒண்ணும் வழி பண்ணாமப் போய்ட்டாரே. பெரிசாப் பேசினாரு. ஆனா தன்னோட உடம்பைப் பாதுகாக்காம விட்டுட்டாரு. என்றோ, இனிமே இந்தக் குடும்பம் நல்லா முன்னுக்கு வந்துடும் என்று ஆரம்பித்து ஏகமாய் விமர்சனம் செய்ய அனுமதித்து விடக்கூடாது.
நாம் எப்படியெல்லாம் பாராட்டப்படவேண்டும் என்று விரும்புகிறோமோ அவற்றை அடைவதற்கு என்ன வழி என்று இந்த நிமிடமே நாம் தீர்மானித்துவிட்டால்கூட இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நம்மால் ஈடுகட்டிவிட முடியும்.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருப்பினும், அது துடைத்து எடுக்கப்பட்ட வாழ்க்கையாக நம் புதுவாழ்க்கை அமைய இந்த நிமிடத் தீர்மானம் உங்களுக்கு உதவப் போகிறது.
Kumudam

No comments: