ஞாபகசக்தி அதிகரிக்க...
வல்லாரை கீரையைச் சட்னியாக அரைத்துச் சாப்பிடலாம். அதிலுள்ள Asiaticosides, மூளைச் சோர்வு தராமல் அறிவைத் துலங்கவைக்கும் என்று நவீன அறிவியல் நம் பாரம்பரியப் புரிதலுக்குச் சான்று அளிக்கிறது. கொத்துமல்லி சட்னி அரைப்பதுபோல் கொஞ்சம் மிளகாய் வற்றல், கொஞ்சமாக புளியைச் சேர்த்து சட்னியாக அரைத்து தோசைக்குச் சாப்பிடலாம். வல்லாரை தோசை, வல்லாரை சூப் இன்றைக்கு பாரம்பரிய உணவகங்களில் பிரபல உணவும்கூட.
'பிரமி’ - பாரம்பரிய மருத்துவத்தின் பிரபலமான ஞாபகசக்தி மருந்து. மறதியை நீக்கவும், ஞாபகசக்தியை அதிகரிக்கவும் இதில் உள்ள Baccosides பயன் அளிப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது, நீரோடைப் பக்கம் நிற்பதால் 'நீர்ப் பிரமி’ என்றும் அழைக்கப்படும்.
சித்த மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படும் வாலுளுவை அரிசி எனும் மூலிகையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில், மறதிக்கு மருந்து எடுக்கும் முயற்சி இன்றும் ஆய்வில் உள்ளது. நீதி வழங்கும் முன் அலசி ஆராய(!) அந்தக் கால நீதிபதிகள் இதில் இரண்டு அரிசி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார்களாம்.
DHA - ஞாபகமறதி நீக்க பயன்படும் சத்து மீனில் இருந்தும், ஃபிளாக்ஸ் விதையில் இருந்தும் இதை உணவில் அன்றாடம் பெற்றுக்கொள்ள முடியும்.
வல்லாரையோ, பிரமியோ எதுவாக இருந்தாலும் நாம் எடுக்கும் முயற்சியில்தான் பயன் அளிக்குமே தவிர, சுவர் ஏறிக் குதித்து படம் பார்த்துவிட்டு குப்புறப் படுத்துத் தூங்கும் பிள்ளைக்கு, சந்தனக் காப்பு அரைத்துக் குளிப்பாட்டினாலும் எதுவும் நினைவில் நிற்காது!
யோகா அளிக்கும் ஆஹா மெமரி!
தினசரி 20 முதல் 40 நிமிடங்கள் யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிராணாயாமப் பயிற்சிகள், முதியோருக்கு மறதியைப் போக்கவும், இளைஞர்களுக்கு ஞாபகசக்தியைப் பெருக்கவும் பெரும் அளவில் பயன்படும் என்று பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. யோகாசனப் பயிற்சியும், பிராணாயாமப் பயிற்சியும், வார்த்தைகளைத் தேடும் மறதியை, உருவ மறதியை, கவனச் சிதறலால் ஏற்படும் மறதியை, வார்த்தைகளைச் சரளமாக உச்சரிப்பதை நிர்வகிக்கும் ஆற்றல் குறைவு, பணியில் மந்தம் போன்றவற்றைத் தீர்ப்பதாக Trail Making Test மூலம் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள். கூகுளிலோ, பழைய புத்தகக் கடையில் தற்செயலாகப் பார்த்த புத்தகத்திலோ கற்றுக்கொள்ளாமல், யோகாசனப் பயிற்சியில் தேர்ந்த ஆசிரியரிடம் இதைக் கற்றுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்!
Source: Vikatan.com